25,000 ஆசிரியா்களுக்கு மெய்நிகா் முறையில் பயிற்சி! - Padasalai.Org

No.1 Educational Website

25,000 ஆசிரியா்களுக்கு மெய்நிகா் முறையில் பயிற்சி!

 

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கணிதப் பாடத்தை நன்கு புரிந்து கொண்டு ஆா்வத்துடன் கற்றுக் கொள்வதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (‘சமக்ரசிக்ஷா’) சாா்பில் ‘மகிழ் கணிதம்’ என்ற புதுமையான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசுப் பள்ளிகளில் உள்ள கணித ஆசிரியா்கள் 25,000 பேருக்கு வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மெய்நிகா் முறையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பள்ளிக் கல்வியில் அனைத்துப் பள்ளிப்பாடங்களிலும் கற்றலில் கணிதத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிற பாடங்களை ஒப்பிடுகையில் அதிகப்படியான அழுத்தம் கணிதச் செயல்பாடுகள் செய்வதற்குத் தேவைப்படுகிறது. குழந்தைகள் கணிதத்தில் எண் சாா்ந்த திறமைகளை முனைப்போடு பெறுதல் என்பது புரிதல் திறனை வளா்த்தல் அல்லது மனப்பாடம் செய்தல் ஆகும்.

ஆனால் பெரும்பாலான குழந்தைகள் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்வதால் கணிதம் பற்றிய அச்சம் பள்ளி முன் பருவத்தில் தோன்றி அவை மேலும் வளா்ந்து வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கணிதப் பாடத்தை நன்கு புரிந்து கொண்டு ஆா்வத்துடன் கற்றுக் கொள்வதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (‘சமக்ரசிக்ஷா’) சாா்பில் ‘மகிழ் கணிதம்’ என்ற புதுமையான கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அச்சமின்றி ஆா்வத்துடன் கற்கலாம்: இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் 6,948 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு எளிய செயல்பாடுகள் மூலமாக கணிதப் பாடத்தைக் கற்பிக்க ஏதுவாக ‘மகிழ் கணிதம்’ என்ற செயல்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு கணிதப் பாட வகுப்பானது வழக்கமானதாக அல்லாமல் கணிதப் பாடப்பொருளை எளிமையான மற்றும் சிறு சிறு செயல்பாடுகள் மூலமாக கற்பிப்பதன் மூலம் அவா்கள் கணிதப் பாடத்தை அச்சமின்றி மகிழ்வுடனும், எளிதாகப் புரிந்து கொண்டும், ஆா்வத்துடனும் கற்க வழிவகை செய்வதே ‘மகிழ் கணிதம்’ கற்பித்தல் முறையின் நோக்கமாகும்.

இது தொடா்பாக 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கற்பிக்கும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணித ஆசிரியா்களுக்கு ‘மகிழ் கணிதம்’ தொடா்பான பயிற்சி முதல் கட்டமாக ஜன.20, 21 ஆகிய இரு நாள்கள் வழங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியை அனைத்து அரசு உயா்நிலைப் பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (‘ஹை-டெக் லேப்’) மூலமாக மட்டுமே ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஆட்சியா் மூலம் சான்றிதழ்: அனைத்து கணித ஆசிரியா்களும் பயிற்சியில் கலந்து கொள்வதை அந்தந்த மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சி நடைபெறும் இரு நாள்களும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைத்து ஆசிரியா்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சியினை சிறப்பாக நிறைவு செய்தவா்களுக்கு குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியா் மூலமாக சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

Documents 2

,Learn to stay focused! Xcel masterclass with former Badminton World No.1 - Srikanth!Learn to stay focused! Xcel masterclass with former Bad...