75 அரசு பள்ளி மாணவர்களுக்கு சீட் சேலம் மாவட்டம் மீண்டும் முதலிடம் - Padasalai.Org

No.1 Educational Website

75 அரசு பள்ளி மாணவர்களுக்கு சீட் சேலம் மாவட்டம் மீண்டும் முதலிடம்

 சேலம் மாவட்டத்தில், அரசு பள்ளியை சேர்ந்த மாணவ - மாணவியர் 75 பேருக்கு மருத்துவம் படிக்க 'சீட்' கிடைத்துள்ளதால், தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக, தமிழகத்திலேயே அதிக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாவட்டமாக சேலம் சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில், அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.தொடர்ந்து இந்த ஒதுக்கீடில் சேரும் மாணவ - மாணவியருக்கான கல்விக்கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளையும், தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது. 

இதனால், அரசு பள்ளி மாணவ - மாணவியரிடையே நீட் தேர்வில் பங்கேற்க ஆர்வம் அதிகரித்தது.கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கான ஒதுக்கீடில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேர் எம்.பி.பி.எஸ்., ஒருவர் பி.டி.எஸ்., என, 27 பேர் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர்.

இதனால், தமிழகத்தில் அதிக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க சேர்ந்த மாவட்டத்தில் சேலம் முதலிடம் பிடித்தது.நடப்பு கல்வியாண்டில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ - மாணவியர், 1,135 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில், 148 பேர் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

இரு நாட்களாக அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு சேர்க்கை நடந்தது. இதில், 66 பேர் எம்.பி.பி.எஸ்., 9 பேர் பி.டி.எஸ்., என, 75 பேருக்கு சீட் கிடைத்தது.ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த 9 மாணவியர் எம்.பி.பி.எஸ்., மற்றும் இரண்டு மாணவியர் பி.டி.எஸ்., என ஒரே பள்ளியில், 11 பேருக்கு சேர்க்கை கிடைத்துள்ளது.இதன் மூலம், தமிழகத்திலேயே அதிக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாவட்டமாக சேலம் இரண்டாவது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment