தேர்வு எழுத கருப்பு மை பந்துமுனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: TNPSC அறிவிப்பு - Padasalai.Org

No.1 Educational Website

தேர்வு எழுத கருப்பு மை பந்துமுனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: TNPSC அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பின்படி தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் (மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) வருகிற 22ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள்(ஹால் டிக்கெட்) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும்.

தேர்வின் போது தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும் விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும். எந்த ஒரு தேர்வரும் முற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 9.15 மணிக்குப் பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 1.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

எந்த ஒரு தேர்வரும் பிற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 2.15 மணிக்குப் பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 5.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை எளிதில் தெரிந்து கொள்ளும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில், விரைவுத்தகவல் குறியீடு அச்சிடப்பட்டுள்ளது.

இதனை விரைவுத்தகவல் குறியீட்டு செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை கூகுள் மேப் மூலமாக தெரிந்து கொண்டு பயன் பெறலாம். தேர்வு அறைக்குள் அலைபேசி மற்றும் வேறு ஏதேனும் மின்னணு உபகரணங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. எனவே விண்ணப்பதாரர்கள் உடமைகளை தேர்வுமையத்திலுள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்க வேண்டும். இருப்பினும் சொந்த உடமைகளை பாதுகாப்பு அறையில் வைப்பது தேர்வரின் சொந்த  பொறுப்பிற்குட்பட்டதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Documents 2

,Learn to stay focused! Xcel masterclass with former Badminton World No.1 - Srikanth!Learn to stay focused! Xcel masterclass with former Bad...