போற்றுதலுக்குரிய நம் ஆசிரியர்களை போட்டுத்தள்ளும் மனநிலை உருவானது எப்படி? - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை! - Padasalai.Org

No.1 Educational Website

போற்றுதலுக்குரிய நம் ஆசிரியர்களை போட்டுத்தள்ளும் மனநிலை உருவானது எப்படி? - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை!

  

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை


உலகின் செல்வங்களில் எல்லாம் மிக உயர்ந்த செல்வம் கல்விச்செல்வம் ஏனைய அனைத்து செல்வங்களும் அத்தகைய சிறப்புடைய செல்வங்கள் அல்ல என்பதை விளக்கும் வகையில்...

"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை." என்று

தெய்வப்புலவர் திருவள்ளுவர் கல்வியின் மேன்மையை எடுத்துரைத்துள்ளார்.

அப்படி கல்விச் செல்வத்தை நமக்கு கற்பிக்கும் ஆசிரியர்களை, மாதா பிதா குரு தெய்வம் என்று அன்னை தந்தைக்குப் பிறகு, ஆனால் தெய்வத்திற்கும் முன்பாக வைத்து நாம் போற்றி வணங்குகிறோம். இப்படிப்பட்ட உயர்ந்த பெருமைகளுக்கும் போற்றுதலுக்கும் உரிய ஆசிரியர் பணி, இன்றைய சூழலில் மாணவர்களால் அதே சிறப்புடன் மதிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கல்வி வணிக மையமாக ஆனதாலும், அப்துல் கலாம் அவர்களைப் போல ஆசிரியப் பணியை புனிதப் பணியாக, அர்ப்பணிப்பு உணர்வுடன். ஒரு சமூக சேவையாக செய்யும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்ததாலும், பணத்திற்காக பல்கலைக்கழகப் பதவிகள் விலை போவதாலும், அறிவுக்கும், ஞானத்திற்கும், கல்விச்செல்வத்தை அடைய நினைக்கும் மாணவர்களுக்குப் பதிலாக, வேலைவாய்ப்பை நோக்கிய கல்வி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாலும், மாணவர்கள் ஆசிரியர்கள் இடையே இருந்த பக்தி மிகுந்த, அச்சம் கலந்த, மரியாதை உணர்வு, குறைந்துவிட்டது,

ஆசிரியர்கள் மாணவர்களை துன்புறுத்துகிறார்கள், அடிக்கின்றார்கள். என்றச் குற்றச்சாட்டுகள் எல்லாம் மறைந்து போயின. இப்போதெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்களால் தங்களுக்கு, தங்கள் வேலைக்கு, தங்கள் உயிருக்கு, ஆபத்து வந்து விடுமோ என்ற அச்ச உணர்வுடனேயே, அவர்களை அணுக வேண்டியிருக்கிறது,

இப்படித்தான் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி கிராமத்தில்

பதினோராம் வகுப்பு பள்ளி மாணவன் ஆசிரியர் அவரை கண்டித்ததால், பள்ளியை

விட்டு வெளியேறி கத்தியுடன் அவரைத் தாக்கப் பள்ளிக்கு வந்துள்ளான்.

வெள்ளக்கோயில் பகுதியிலுள்ள பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியரின் மீது, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். பள்ளி ஆசிரியர் மீது FIR போடுவதற்காக மேல் நடவடிக்கை எடுப்பதற்காக திமுக ஆளும் கட்சியினர் மாணவர்களின் சார்பாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை வலியுறுத்துகிறார்கள்.

இதேபோல தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதாக ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவாரம் பகுதியில் உள்ள பள்ளியில், புத்தகம் கொண்டு வரவில்லை என்பதற்காக கண்டித்த ஆங்கில ஆசிரியரை மாணவர் தாக்கியுள்ளார்.

ஜி கல்லுப்பட்டியில் மாணவர்கள் ஒன்றுகூடி ஆசிரியரை கேரோ செய்துள்ளனர்.

தேவதானப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் கத்தியுடன் வகுப்புக்கு வந்து ஆசிரியரை குத்து முயன்றுள்ளார். போலீசார் விசாரணை செய்த போது கூட மாணவரின் கோவம் அடங்கவில்லை.

இன்று எங்கே போய் கொண்டிருக்கிறது நம் தமிழகம், போற்றுதலுக்குரிய நம் ஆசிரியர்களை போட்டுத்தள்ளும் மனநிலை உருவானது எப்படி? சட்டம் ஒழுங்கு குறித்த அச்சம் மாணவர்கள் மத்தியில் கூட இல்லாமல் போனது

எப்படி?

மாணவர்களை சரியான மார்க்கத்தில் வழி நடத்தவேண்டிய அரசு கல்வியை வணிக மயமாக்கி குழப்பத்தில் ஆழ்த்தி வருவதால் இது போன்ற அவலங்கள் தொடர்கின்றன.

நான் தமிழக அரசிடம் வேண்டுவது, கல்வியை தயவு செய்து கல்வியாளர்களிடம் விட்டுவிடுங்கள், அரசியல் செய்வதற்கான களம் கல்வித்துறை அல்ல, நமக்கு மாணவர்களின் நலனும் நல்வாழ்வும் மிக மிக முக்கியம். அதேபோல ஆசிரியர்களின் சமூகப் பாதுகாப்பும், தன்னிறைவும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுத்து, இது போன்ற தவறுகள் இனி நிகழாதவாறு தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

1 comment:

  1. ஆசிரியர்களுக்கு குரல் கொடுக்கும் ஒரே அரசியல் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள்... அன்று TET க்கு எதிரான அறிக்கை. இன்று ஆசிரியர் பணி பாதுகாப்பை வலியுறுத்தி அறிக்கை... நன்றி அண்ணாமலை SIR... வேலை இல்லா ஆசிரியர் சங்கம் எப்போதும் உங்கள் பக்கம்.... நன்றி

    ReplyDelete