மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களின் சில கோரிக்கைகள்! - Padasalai.Org

No.1 Educational Website

மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களின் சில கோரிக்கைகள்!

ஆசிரியர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் மாணவர் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உயிர் மற்றும் பணிப் பாதுகாப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு தழுவிய ஒரு நாள் போராட்டத்தினை அனைத்து ஆசிரியர் அமைப்புகளும் ஒருங்கிணைத்து முன்னெடுக்க வேண்டும். குற்றச் செயல்பாடுகளுக்கான பின்புலங்கள் நீக்கப்பட வேண்டும். சான்று: 1. அரசு ஒதுக்கிய தேர்வு காலங்கள் தவிர்த்து, கற்றல் கற்பித்தல் நேரங்களில் சிறு தேர்வு வைக்கத் தடை விதிக்க வேண்டும். 2.மாணவர்களுக்காக அரசு ஒதுக்கிய கற்றல் கற்பித்தல் நேரங்கள் தவிர பிற நேரங்களில் மாணவர்களை வகுப்பறையிலோ பள்ளியிலோ அடைத்து வைக்கத் தடை விதிக்க வேண்டும். உணவு இடைவேலை நேரங்களில் கூட மாணவர்களை உண்ணவிடாத கொடுமைக்குத் தடை விதிக்க வேண்டும். 3.சிறப்புப் படிப்பு என்ற பெயரில் மாணவர்களை அதிக நேரம் சிறைப்படுத்தும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களின் தனிப்பட்ட மேலாதிக்கத் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 4. கற்றல் கற்பித்தல் நேரங்களில், கற்பித்தல் பணியை விட்டுவிட்டு, எந்த நேரமும் தேர்விற்விற்குத் தயார் செய்யும் போக்கிற்குத் தடை விதிக்க வேண்டும். 5. மேற்கண்டவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணமான தேர்ச்சி விழுக்காட்டை அரசியலாக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; கற்பிப்பதும், தேர்விற்கு வழிகாட்டுவதும் மட்டுமே ஆசிரியர் பணி. மாணவர் தேர்ச்சி பெறாமைக்கு ஆசிரியர்களை மட்டுமே காரணம் என்ற நடுவு நிலைமையற்ற ஒற்றைக் கண் பார்வையை மாற்றி அமைக்க வேண்டும். 6. ஆசிரியர்களை வகுப்பறைக்குச் செல்லவிடாமல் அலுவலகப் பணிக்கு உட்படுத்தும் நிலைக்குச் சாவுமணி அடிக்க வேண்டும். 7. பள்ளிகளிலுள்ள ஆசிரியரல்லா ஏழு பணியிடங்களுக்கும் பணியாளர்களை அமர்த்த வேண்டும். 8. விலையில்லாப் பொருட்கள் உள்ளிட்ட நலத் திட்டங்களைச் சத்துணவு அமைப்பாளர்கள் வழியாகச் செயல்படுத்தும் பொருட்டு, அவர்களை முழு நேரப் பணியாளர்களாக ஆக்க வேண்டும். 8. அரசு உயர் பொறுப்பிலுள்ள, நீதி அரசர்கள், அமைச்சர் முதல் ஆண்டி வரை ஆசிரியர்களை வன்மத்தோடு பார்க்கும் கொடிய பார்வை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இவர்களெல்லோரையும் ஆசிரியர்களை வன்மத்தோடு பார்க்க வைத்துவிட்டு. மாணவர்கள் மட்டும் ஆசிரியர்களை வழிகாட்டிகளாகப் பார்க்க வேண்டும்; அவர்கள் சொற்படி நடக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்க. முடியும்? அவர்கள் வயதிற்கு அவர்கள் ஆசிரியர்களை வன்மமாகப் பார்க்கிறார்கள். மாணவர்கள் எதிரிகளாக பார்க்க வைக்கப்பட்டுள்ளனர். 9. வருகைப் பதிவேட்டில் பெயர் இருந்து, பள்ளிக்கு வராவிட்டாலும் அனைவரும் தேர்ச்ச்சி என்ற கொடிய நிலையை மாற்றி அமைக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் அடுத்த வகுப்பிற்குச் செல்ல குறைந்த அளவிலான கற்றல் திறன் இருக்க வேண்டும். எண், எழுத்து அடையாளம் தெரியாத மாணவர்களை மூன்றாம் வகுப்பை விட்டுக் கடத்துவதும், கூட்டல் கழித்தல் கணக்கும், படிக்கவும் (வாசிக்கத்) தெரியாத மாணவர்களை ஐந்தாம் வகுப்பைவிட்டுக் கடத்துவதுமான கொடிய தேர்ச்சி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். 10. கல்வியில் செயல்பாடு இருக்கலாம் செயல்பாடே கல்வியாக இருக்கக் கூடாது. இவையும் இன்ன பிறவுமான காரணங்களை நீக்காமல் மாணவர்களின் குற்றச் செயல்களைத் தடுக்க முடியாது. 11. தேர்வைவும், தேர்ச்சி விழுக்காடு அரசியலையும் மட்டுமே கல்வித்துறை மையமாகக் கொண்டிருக்கும் வரை மாணவர்களிடம் நல்லொழுக்கத்தையும், நற்செயல்பாட்டையும் என்றென்றைக்கும் எதிர்பார்க்க முடியாது. கண்ணிரண்டும் விற்றுச் ஓவியம் பெற்றால் என்ன பயன்? "தேர்வு மையக் கல்வியை ஒழிப்போம்; தேர்ச்சி மிக்க சமூகத்தைப் படைப்போம்" - ஈ.சங்கரநாராயணன், பொறுப்பாளர், தமிழாசிரியர் முன்னணி 9965868114

No comments:

Post a Comment