ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிச் சமீபமாகப் பல்வேறு செய்திகள் வருகின்றன. மாணவரை ஆசிரியரும் ஆசிரியரை மாணவரும் பாதுகாத்த காலம் போய்விட்டது. மாணவர்களிடமிருந்து தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்னும் வினோதக் கோரிக்கையை வைத்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். குற்றம்சாட்டும் எல்லா விரல்களும் மாணவர்களை நோக்கியே நீள்கின்றன.ஆசிரியர்களை நோக்கி ஒற்றை விரலை நீட்ட விரும்புகிறேன்.
மனிதனும் சமூக விலங்குதானே!
கரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கல்விச் சூழலிலிருந்து அந்நியப்பட்டிருந்த மாணவர்கள் பலருக்குக் கலந்தாலோசனை தேவை என்பதில் சந்தேகமில்லை. பலருக்கு எழுதவும் படிக்கவும் மறந்துபோய்விட்டது. வகுப்பில் உட்காரும் மனநிலை மாறிவிட்டது. மாணவர்கள் பலர் வேலைக்குச் சென்று சம்பாதிக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் நிறைய நேரம் செலவிட்டு இப்போது விடுபட முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை எல்லாம் மீண்டும் கல்விச் சூழலுக்குள் கொண்டு வருவது கடினமான வேலைதான். ஆசிரியர்களுக்குப் பொறுப்பு கூடிவிட்டது.
அதைப் போலவே கல்விச் சூழலிலிருந்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுகளாக அந்நியப்பட்டிருந்தனர். வகுப்பறையில் பாடம் எடுக்க வாய்ப்பில்லை. தேர்வுகள் நடத்தவில்லை. மாணவர்களை நேரடியாகச் சந்திக்க முடியவில்லை. கரும்பலகையில் எழுதவில்லை. இப்போது ஆசிரியர்கள் மீண்டும் கல்விச் சூழலுக்குள் தங்களைப் பொருத்திக்கொள்வதற்கும் மாணவர்களின் மனநிலையை உணர்ந்து அணுகுமுறைகளை உருவாக்கிக் கொள்வதற்கும் பயிற்சிகள் தேவை. ஆசிரியர்களுக்கும் கலந்தாலோசனை அவசியம்.
இன்று மாணவர்களோடு ஆசிரியர்களுக்குப் பிரச்சினைகள் வருவதற்கு முக்கியமான காரணம் தலைமுடி. *ஒரு மாணவரைப் பார்த்தவுடன் சிலிர்த்துக்கொண்டு நிற்கும் முடிதான் ஆசிரியரின் கண்ணுக்குப் படுகிறது. இன்றைய இளைஞர்கள் முடி திருத்திக்கொள்ளும் முறை ஆசிரியர்களுக்கு உவப்பானதாக இல்லை.
தலையைச் சுற்றிலும் மண்டை தெரியுமளவு ஒட்டச் சிரைத்துவிட்டு சேவலின் கொண்டைபோல உச்சியில் அடர்த்தியாக மயிரை வைத்துக்கொள்ளும் முறை இன்று பிரபலமாக இருக்கிறது. தலையின் ஒருபுறம் முழுமையாகச் செதுக்குதல், கோடிழுத்துக்கொள்ளுதல், மயிர்களை நேராக நிறுத்துதல், நெற்றியில் படரவிடுதல் எனச் சிறுசிறு மாற்றங்களுடன் அதில் பல பாணிகள் உள்ளன. கோடிழுத்தல் ஒன்றை எடுத்தால் அதிலேயே வெவ்வேறு விதங்கள். ஒற்றைக் கோடு, ரெட்டைக் கோடு, முக்கோடு, நேர்கோடு, சுற்றுக்கோடு. நெற்றியில் மயிரைப் படரவிடுதலில் வெவ்வேறு அளவுகள். கண்ணை மறைத்தல், நடுநெற்றி வரை தவழுதல், பக்கவாட்டு நெற்றியில் படருதல்.
இத்தகைய முடிதிருத்தத்தைப் பொதுவாக 'பாக்ஸ் கட்டிங்' (Box Cutting) என்று நம் இளைஞர்கள் சொல்கிறார்கள். முடிதிருத்தகங்களில் பல பாணிகளுக்கான படங்களை வைத்திருக்கிறார்கள். ஆல்பங்களும் உள்ளன. அவற்றில் விருப்பமானதைத் தேர்வுசெய்து கொடுத்தால் அதன்படி முடிதிருத்துகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் பார்த்த ஒரு பாணியின் படத்தைக் காட்டி அப்படி வேண்டும் என்று கேட்கிறார்கள். தம் தலைமயிர் பாணியைத் தீர்மானிக்க இன்றைய இளைஞர்களுக்கு முன்னால் பல தேர்வுகள் கிடக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாணியை வைத்து அழகு பார்க்க அவர்களால் முடிகிறது.
ஆண் பறவைகள் தம் இறகுகளை விரித்து அழகு காட்டிப் பெண் பறவைகளை ஈர்க்கின்றன என்கிறார்கள். ஆண் மயில் தன் தோகையை விரித்தாடும்போது பெண் மயில் மட்டுமா மயங்குகிறது? ஆண் விலங்குகள் தம் பிடரி மயிரைச் சிலிர்த்துக் காட்டிப் பெண் விலங்குகளை ஈர்க்கின்றனவே! மனிதனும் சமூக விலங்குதானே! தம் தலைமயிரைக் கலையாக்கிக் காட்ட விரும்புவது இயற்கை.
சமகாலப் போக்குகளில் விருப்பம்
இணையத்தில் பார்த்தால் 2022ஆம் ஆண்டின் பிரபலமான முடிதிருத்த வகைகள் நூற்றுக்கணக்கில் வருகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர்; ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைமை. (Fade, Mid fade, Temple fade, Taper fade, Skin fade) எனப் போய்க்கொண்டே இருக்கிறது. ஃபேட், டாப் எனும் இரு வகைமைகளை இணைத்து உருவாக்கியுள்ள பாணிகளே இன்று வழக்கில் இருக்கின்றன. அழகழகான படங்களைப் பார்க்கும்போது இளமைப் பருவத்தைக் கடந்துவிட்ட துயரம் பீடிக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவில் இந்த வகை பாணிகள் இன்று பிரபலமாக இருப்பதை அறிய முடிகிறது. எல்லா வகையிலும் உலகமயமாக்கலில் கலந்துவிட்ட நம்மைத் தலைமயிர் மட்டும் விட்டுவிடுமா?
கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன் தலையில் பலவிதமான பாணிகளைக் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு போட்டித் தொடருக்கும் ஒவ்வொரு பாணி. சிலசமயம் ஒவ்வொரு போட்டிக்கும் மாற்றுகிறாரோ என்று தோன்றும். நம் நடிகர்களும் படத்திற்குப் படம் தலை பாணியை மாற்றியிருக்கிறார்கள். நடிகர் விஜய் படத்திற்குப் படம் புதுவிதம் காட்டியிருக்கிறார். ஒரே பாடலில் நான்கைந்து பாணிகளும் வந்திருக்கின்றன. ‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு ‘ராணுவ ஸ்டைல்’ முடிதிருத்தம் இளைஞர்களிடம் பிரபலமாயிற்று.
மாணவர்கள் இன்றைய தலைமுறையினர். எல்லாவற்றிலும் சமகாலத்துப் போக்குகளையே விரும்புவார்கள். அதுதான் தலைமயிரில் பிரதிபலிக்கிறது. இந்த வகை பாணி ஏன் ஆசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை? தலையைச் சுற்றிலும் ஒன்றுமில்லாமல் உச்சியில் கிரீடம் போல நின்றிருக்கும் மயிர்க்கற்றை ஆசிரியருக்கு ‘அடங்காமை’யின் குறியீடாக அர்த்தமாகிறது. திமிர் என்று தோன்றுகிறது. ரவுடி பிம்பத்திற்குள் எளிதாக மாணவரை அடக்கிவிடுகிறார்கள். உடனே ஆசிரியரின் ‘தான்’ சீண்டப்படுகிறது. மாணவரின் தலைபாணியை ஏளனமாகச் சில ஆசிரியர்கள் பார்க்கிறார்கள். சிலர் சொற்களால் கேலி செய்கிறார்கள். சிலர் அறிவுரை சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். இவற்றையெல்லாம் சகித்தபடி மனதில் திட்டிக்கொண்டே மௌனமாக மாணவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
சில ஆசிரியர்கள் இவற்றில் திருப்திப்படுவதில்லை. எப்படியாவது மாணவரை அடக்கித் தம் கீழ்க் கொண்டுவந்துவிட வேண்டும் எனக் கருதி அடக்குமுறை உத்திகளைக் கையாள்கிறார்கள். சரியாக முடி வெட்டிக்கொண்டுதான் வர வேண்டும் என விரட்டுகிறார்கள், வெளியே நிறுத்துகிறார்கள், வருகைப்பதிவு வழங்க மறுக்கிறார்கள். மாணவரின் தன்மானத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் வகையில் கடுஞ்சொற்களை வீசுகிறார்கள். சாக்பீஸைத் தூக்கி எறிந்துவிட்டுக் கத்திரிக்கோலைக் கையில் எடுக்கத் துடிக்கும் ஆசிரியர்கள் பலருண்டு.
ஆசிரியர்களின் அலுப்பூட்டும் பேச்சுக்களைக் கேட்டுப் பெரும்பாலான மாணவர்கள் தலைகுனிந்து போகும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள். சிலர் எதிர்ப்புணர்வு கொண்டவர்கள். அவர்கள் ஆசிரியர்களுக்குப் பதிலடி கொடுக்கிறார்கள். சில சமயம் சொற்கள்; சில சமயம் கைகள்; சில சமயம் கைக்குக் கிடைப்பவை. மாணவர் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை ஆசிரியரே தீர்மானிக்கிறார்.
சிகையும் சாதியும்
ஆசிரியர்கள் கொஞ்சம் தம் இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டும். பள்ளியிலும் கல்லூரியிலும் அவர்கள் பயின்ற காலத்தில் எத்தகைய தலைமுடி பாணி இருந்தது? நெளி வைத்தல், முன்மண்டையில் கூடு வைத்தல், ஹிப்பி எனப் பல பாணிகளைக் கண்டிருப்பர். அந்தந்தக் காலத் திரைப்படங்களைப் பார்த்தால் ஒவ்வொரு பத்தாண்டிலும் என்னென்ன வகைகள் பிரபலமாக இருந்திருக்கின்றன என்பதைக் கண்டுகொள்ளலாம். 1980-களில் நடக்கும் சம்பவங்களைக் கொண்ட ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் காலப் பின்னணியை உணர்த்தத் தலைமுடி பாணியை ஒரு உத்தியாகக் கையாண்டிருந்தனர். இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
கல்விக் காலப் புகைப்படங்கள் தலைமயிர்ச் சரித்திரத்தைச் சொல்வன. *தம் ஆல்பத்தை ஒவ்வொரு ஆசிரியரும் எடுத்து அடிக்கடி பார்க்க வேண்டும். தம் காலத்துத் தலைமயிர் பாணியைப் பற்றி அப்போது என்ன விமர்சனங்கள் பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் இருந்தன என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முப்பது வயதுக்கு மேல் ஒவ்வொருவரும் புதிய பாணிக்கு மாறுவதிலிருந்து தேங்கிப் போய்விடுகிறார்கள். ஆனால், தம் தலைமயிரில் கவனம் சிதைவதில்லை. நரை வரத் தொடங்கியதும் சாயம் பூசத் தொடங்குகிறார்கள். சந்தையில் இன்று மிகுதியாக விற்கும் அலங்காரப் பொருட்களில் முக்கியமானது தலைச்சாயம். வயதைக் குறைத்துக் காட்டும் சாயம் எது, முடி உதிராமல் படியும் சாயம் எது என்றெல்லாம் பார்த்துப் பார்த்துப் பூசிக்கொள்கிறார்கள். இயற்கைச் சாயம் என்றும் பூசிக்கொள்வது எளிது என்றும் சொல்லிவரும் விளம்பரங்கள் கணிசமானவை. நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் – குறிப்பாக நடுத்தரக் குடும்பத்தினர் – தலைச்சாயம் பூசாதவரைக் காண்பது கடினம். முடிதிருத்தகங்களிலேயே இப்போது விலைப்பட்டியலில் ‘கட்டிங், சேவிங், டை’ என்று மூன்றையும் சேர்த்து விலை குறித்திருக்கிறார்கள். சாயம் பூசாத சலூன்கள் இல்லை. தலைக்குச் சாயம் பூசாத ஆசிரியர் அதிசயம்.
சிலரோ வழுக்கை தெரியாத வகையில் தமக்குப் பிடித்த பாணிச் செயற்கை முடியை ஒட்டிக்கொள்கின்றனர். இத்தகைய தோற்றம்கொண்ட ஆசிரியர்கள் பலர். தம் கால்சட்டைப் பையில் சீப்பு வைத்திருக்காத ஆசிரியர் உண்டா? தம் தலைமயிரில் இவ்வாறு கவனம் எடுத்துக்கொள்வதில் தவறு ஏதுமில்லை. ஆனால், பதின்வயதில் இருக்கும் மாணவர்கள் தம் தலைமயிரை எப்படி வைத்துக்கொள்வது எனத் தீர்மானிக்கும் செயலில் ஆசிரியர்கள் ஏன் இறங்குகிறார்கள்?
ஆசிரியர்களின் வீட்டிலும் மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் 'பாக்ஸ் கட்டிங்' பாணியைத்தான் விரும்புகிறார்கள்.
ஆசிரியப் பெற்றோரில் எத்தனை பேர் தம் மகன்களின் தலைமயிர் பாணியில் கைவைக்க முடியும்?
ஒருவேளை கடுஞ்சிந்தை கொண்ட பெற்றோராக இருந்தால் பள்ளிக் காலம் வரைக்கும் கட்டுப்படுத்தி வைக்கலாம். கல்லூரிக்குள் நுழைந்துவிட்ட எந்த மகனின் தலையிலும் ஆசிரியப் பெற்றோர் கைவைக்க முடியாது. ‘போப்பா’, ‘போம்மா’ என்னும் ஒற்றை வார்த்தையில் அவர்கள் அறிவுரையைப் புறந்தள்ளிவிடுவார்கள். தம் பிள்ளைகளிடம் செல்லுபடியாகாத விஷயத்தை மாணவர்களிடம் வந்து ஏன் திணிக்க வேண்டும்?*
மாணவர்களின் தலைமயிர் எப்படி இருக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்? மயிரைக் குறைவாக வைத்திருந்தால் ஆசிரியர்களுக்குப் பிடிக்கிறது. கொஞ்சம் நீளமாகத்தான் இருக்கட்டுமே. குடுமி வைத்து அதில் பூவும் சூடியிருந்தவர்கள் தானே நம் முன்னோர்?
தலைக்கு எண்ணெய் தேய்த்துப் படியச் சீவியிருந்தால் ஆசிரியர்களுக்குப் பிடிக்கிறது. இன்றைய மாணவர்கள் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதை விரும்புவதில்லை. மயிர் புசுபுசுவென்று அலைந்து காற்றில் பறப்பதை விரும்புகிறார்கள். மொட்டை அடிப்பது, கரும்புள்ளி செம்புள்ளி குத்துவது, ஒருபுறம் மழிப்பது எனத் தலைமயிரில் தண்டனைகளை வைத்திருந்த காலம் போய்விட்டது.
குடுமிக் காலத்தில் குறிப்பிட்ட சாதியினர் இப்படித்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நடைமுறை இருந்தது.
உச்சிக்குடுமி வைத்திருக்கும் உரிமை பெற்றவர்கள் உயர்ந்த சாதியினர்.
பின்மண்டையில் குடுமி போட்டவர்கள் அடுத்த நிலைச் சாதியினர்.
முதுகில் முடிந்து குடுமி போட்டவர்கள் கீழ்நிலையினர். இந்தச் சாதி ஆதிக்கக் காலத்தை நாம் இன்னும் கடக்கவில்லையா?
மாணவர்களின் தலைமயிர் பாணியால் பதறிப்போகும் ஆசிரியர்களுக்குள் அந்தக்காலச் சாதி ஆதிக்க உணர்வு துளி ஒட்டிக்கொண்டிருக்கிறது போலும்.
சுதந்திர உணர்வோடு இன்றைய தலைமுறை தம் மயிரைக் காற்றில் அலைய விடட்டும். உச்சியில் மயிர்க் கிரீடம் தவழட்டுமே!
‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்’ என்கிறார் வள்ளுவர். உலகத்தில் உண்டாகும் மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ப உடனுக்குடன் மாறிக்கொள்ள வேண்டும். தினமும் இளவயதினரைச் சந்திக்கும் ஆசிரியர்களுக்கு அது மிகவும் அவசியம்.
மாற்றத்தை உணர்ந்து மனதைத் திறந்தால் மாணவர் தலைமயிர் பாணியை ஆசிரியர்கள் கண்டு ரசிக்கலாம். மனம் இல்லையேல் தலைகுனிந்துகொண்டு கடந்துவிடலாம். இன்றைய தலைமுறையின் சுதந்திரத்தில் எல்லை மீறித் தலையிடாமல் இருந்தால் போதும். ஆசிரியர் – மாணவர் பிரச்சினை உருவாகாது.
மயிரை மாணவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். கற்பித்தலில் நாம் கவனம் செலுத்துவோம்.
பெருமாள்முருகன்
பேராசிரியர், எழுத்தாளர்
No comments:
Post a Comment