சட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை - புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? - Padasalai.Org

No.1 Educational Website

சட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை - புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

gallerye_041955530_3004850

  இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று (ஏப்.,11) சட்டசபை மீண்டும் கூடுகிறது. உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடக்க உள்ளது.

தமிழக சட்டசபையில் மார்ச் 19ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு, சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இம்மாதம் 6ம்தேதி முதல், சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. நீர்வளம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, உணவு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக அரசு விடுமுறை என்பதால், சட்டசபை கூட்டம் நடக்கவில்லை. விடுமுறைக்கு பின் இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்க உள்ளது. இதில், எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, துறையில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த புதிய அறிவிப்புகளை, உயர்கல்வி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் வெளியிட உள்ளனர்.

ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தரப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற உள்ளது. ஆனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை. சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானத்தை, கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார்.

தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, ஒரு மனதாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் தீர்மானம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை; கவர்னரின் பரிசீலனையில் உள்ளது.

எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தராததை கண்டித்து, இன்றைய சட்டசபை கூட்டத்தில் கேள்விகளை எழுப்பவும், அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணிக்கவும், அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இன்றைய சட்டசபை கூட்டம் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment